தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடங்குளத்தில் தரைதட்டிய மிதவை கப்பல்; தரை மார்க்கமாக கொண்டு வர முடிவு! - KKNPP news

கூடங்குளம் அருகே தரைதட்டி நிற்கும் மிதவைக் கப்பலை மீட்பது குறித்து நடந்த அதிகாரிகளின் கூட்டத்தில், ராட்சத கிரேன்கள் மூலம் தரை மார்க்கமாக கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தரைதட்டிய மிதவை கப்பல்
தரைதட்டிய மிதவை கப்பல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 5:42 PM IST

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6வது அணு உலைகள் கட்டுமானப் பணிகள் சுமார் 49,621 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. 2027ஆம் ஆண்டுக்குள் இதன் கட்டுமானப் பணிகள் முடித்து, மின் உற்பத்திகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான அணு உலைகளுக்கு தேவைப்படும் முக்கிய உதிரி பாகங்கள் ரஷ்யாவில் இருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடி துறைமுகம் கொண்டு வரப்பட்டு, பின் அங்கிருந்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாகப் பகுதிக்குள் உள்ள சிறிய துறைமுகத்திற்கு மிதவைக் கப்பல் மூலமாக எடுத்து வர திட்டமிடப்பட்டு இருந்தது.

ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா இடையே ஏற்பட்ட போரின் காரணமாக, இந்த அணு உலைகளுக்கு வர வேண்டிய உதிரி பாகங்கள் வருவதில் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அணு உலைகளின் பணிகள் முடிய மேலும் சில ஆண்டுகள் ஆகும் என்றும், 2030ஆம் ஆண்டிற்குள் மின் உற்பத்தி தொடங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யாவில் இருந்து வரும் உதிரிபாகங்கள்:இந்நிலையில் கடந்த மாதம் முதல், அணு உலைகளுக்குத் தேவைப்படும் முக்கிய உதிரி பாகங்கள் ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன. அவற்றை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின் கடல் சீற்றம், கடலின் நீரோட்டம், வானிலை மாற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து, பின்னர் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கூடங்குளத்திற்கு எடுத்து வரப்பட்டு வந்தன.

அந்த வகையில், கடந்த 8ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஐந்து மற்றும் ஆறாம் அணு உலைகளுக்கான தலா 310 டன் எடை கொண்ட இரண்டு ஸ்டீம் ஜெனரேட்டர்கள், மிதவைக் கப்பலில் வைத்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டன. அப்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள சிறிய துறைமுக நுழைவுப் பகுதியை நெருங்கும்போது, இழுவைப் படகை இழுத்து வந்த பார்ஜி எனப்படும் மிதவைக் கப்பல் பாறைகளின் இடுக்கில் சிக்கியதால், அதில் இருந்த உலோகத்திலான கயிறு அறுந்து, கப்பல் தரை தட்டி நின்றது.

தொடர் மீட்பு பணிகள்:இதனையடுத்து, கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணிகளுக்காக சென்னை மற்றும் மும்பை துறைமுகங்களிலிருந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, மிதவைக் கப்பலில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பலில் கொண்டு வரப்பட்ட ஸ்டீம் ஜெனரேட்டர்களில் (நீராவி உற்பத்தி கலன்) ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? ஸ்டீம் ஜெனரேட்டர்களுக்கும் மிதவை கப்பலுக்கும் இடையிலான வெல்டிங் செய்யப்பட்டதில் ஏதாவது விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டு, அது குறித்த ஆய்வறிக்கையை தொழில் நுட்ப வல்லுநர்கள், இந்திய அனுமின் உற்பத்திக் கழகத்திடம் சமர்பித்தனர்.

உதவ வந்த இலங்கை கடற்படையினர்: ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், காப்பீட்டுக் கழகத்தின் உயர் அதிகாரிகளும் கூடங்குளத்திற்கு விரைந்து வந்து, தரை தட்டி நின்ற மிதவைக் கப்பலின் மீட்புப் பணிகளை கண்காணித்தனர்.

மேலும், மிதவைக் கப்பலை இழுப்பதற்காக 30 டன் இழுவை திறன் தேவைப்பட்டதை அடுத்து, கூடுதலாக 15 டன் விசைத்திறன் கொண்ட அதிநவீன இழுவைப் படகு, இலங்கையின் கொழும்பு துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

இலங்கையில் இருந்து வந்த இழுவைப் படகின் மாலுமிகள், மேலும் ஒரு இழுவைப் படகு இருந்தால்தான் பாறையில் சிக்கியுள்ள மிதவைப் படகை மீட்க முடியும் என தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு அதிநவீன இழுவைப் படகை இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீட்பு பணிகளில் பின்னடைவு: இதனிடையே 8வது நாளான இன்று (செப்.16) பாறையில் சிக்கியுள்ள ஸ்டீம் ஜெனரேட்டரை ஏற்றி வந்த மிதவைக் கப்பலை மீட்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. கடந்த எட்டு நாட்களாக கடல் சீற்றத்தில் பாதிக்கப்பட்ட மிதவைக் கப்பலின் பல பகுதிகள் சேதம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாறையின் மேல் சரிந்த நிலையில் இருந்த மிதவைக் கப்பலை சமன்படுத்தி நிறுத்திய சில மணி நேரங்களிலேயே, மிதவைக் கப்பலின் ஒரு புறத்தில் கடல் நீர் புகுந்ததால் மீண்டும் சரிந்தது. இதனையடுத்து சேதமடைந்த பகுதிகளை செப்பனிடும் பணிகள் மிகுந்த சவாலாக உள்ளதாக தொழில்நுட்பக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கும் அபாயம்:மேலும் மிதவைக் கப்பலை பலூன் டெக்னாலஜி மூலம் கடலுக்குள் இழுத்து வரப்பட்டாலும், அது கடலில் மூழ்குவதற்கும் அல்லது ஒருபுறம் சரியும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளனர். இதனால் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான நீராவி உற்பத்தி கலன் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

எனவே, இலங்கையில் இருந்து கூடுதலாக வர இருந்த அதிநவீன இழுவைப் படகின் வருகையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மும்பை துறைமுகத்தில் இருந்து வந்துள்ள ஸ்கூபா டைவர்கள், மிதவைக் கப்பலைச் சுற்றியுள்ள பாறைகளையும், மிதவைப் படகுகளில் ஏற்பட்டுள்ள சேதாரங்களையும் ஆழ்கடல் கேமராக்கள் மூலம் புகைப்படம் எடுத்து ஆராய்ந்து வருகின்றனர்.

தரை மார்க்கமாக் கொண்டு வர முடிவு:இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய உயர் அதிகாரிகள், மும்பை துறைமுக தொழில்நுட்பப் பிரிவினர், மிதவைக் கப்பலைக் கொண்டு வந்த ஒப்பந்தக்கார குழு மற்றும் காப்பீட்டுக் கழகத்தினர் ஆகிய குழுக்கள் அடங்கிய கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

அக்கூட்டத்தில் மிதவைக் கப்பலில் உள்ள நீராவி உற்பத்தி கலனை தரைமார்க்கமாக வழிப்பாதை அமைத்து, ராட்சத கிரேன்கள் மூலம் எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதுவரை மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு; கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் தனபால் மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details