திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு உலைகளில் அணுக் கழிவுகளை பாதுகாத்து வைப்பதற்கான AFR (Away From Reactor) எனும் சேமிப்பு மையம் கட்டப்படுகிறது.
கூடங்குளத்தில் செயல்படும் அணுமின் நிலையத்திற்கு அணுக்கழிவு கட்ட தற்காலிக அணுக்கழிவு சேமிப்பு மையம் கட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் இந்த சேமிப்புக் கிடங்கை கட்ட தொழில்நுட்ப குறைபாடு நிலவுவதால், இதனைக் கட்டி முடிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக மத்திய அரசு கூறியதையடுத்து 2022ஆம் ஆண்டுக்குள் சேமிப்பு மையம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், கூடங்குளத்தில் செயல்படும் இரண்டு அணு உலைகளின் அணுக்கழிவுகளை சேமிப்பதற்கான சேமிப்பு மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் ஜுலை 10ஆம் தேதி ராதாபுரத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டாட்சியர் அலுவலகங்களில் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் உள்ளூர் மக்களுக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும் பெரும் கேடுகளை, ஆபத்துக்களை உருவாக்கும் என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களின் நிலை என்னவாகும் என்று கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்கள் புலம்பி வருகின்றனர். கூடங்குளத்திற்கு அதிக எதிர்ப்புகள் இருந்துவரும் நிலையில் தற்போது புதிய வரவாக ஆபத்து மிக்க அணுக்கழிவுகளை கொட்ட மத்திய அரசு திட்டம் தீட்டிவருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.