திருநெல்வேலி:மானூரில் அரசு கலைக் கல்லூரி கட்டுவதற்கு முதலில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது மீண்டும் அந்தப் பணிகள் கைவிடப்பட்டு மாற்று இடத்தில் கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய கல்லூரி கட்டுமானம் நடைபெற்ற இடத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தமிழ்நாடு அரசு கையால் ஆகாத அரசாக இருப்பதாகவும், தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசு செயல்பட்டு வருவதாகவும் விமர்சனம் செய்தார். மாற்று இடத்தில் கல்லூரி கட்டுவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்த அவர் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அரசியல் ரீதியிலான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் செந்தில் பாலாஜிக்கு நடைபெறும் அறுவை சிகிச்சையை நேரலை செய்தால்தான் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று தெரியும் என்றும், உடல் நலத்தைக் காரணம் காட்டி அவருக்குப் புனிதர் பட்டம் கொடுத்து விடுவார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.
2024 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “ஒரே இரவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்த பிரதமர் மோடி மே மாதம் அல்லது வரக்கூடிய டிசம்பர் மாதத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம். அவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்துவார்”, என்றும் குறிப்பிட்ட அவர் காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு ஊழல் ஆட்சியால் தான் பாஜக ஆட்சிக்கு வந்தது என்றும் மோடியை வீழ்த்த மாநிலக் கட்சிகள் வலுப்பெற வேண்டும்”, என்று தெரிவித்தார்.
மேலும் ,“அவர் தேர்தலுக்குப் பிறகு கூட்டாட்சி நடத்தும் விதமாகப் பேச்சுவார்த்தை மூலம் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம். அதை விடுத்து பொது வேட்பாளராக மோடிக்கு எதிராக ராகுல் காந்தியை நிறுத்தினால் அவர் ஊதித் தள்ளி விடுவார். ஒரு பட்டனை அழுத்தினால் குண்டு விழும் என்று ரஷ்யாவும் சீனாவும் கூறிக் கொள்வது போன்று ஒரே பட்டனை அழுத்தினால் பாஜகவிற்கு வாக்குகள் விழும் வகையில் ஏற்பாடுகளை மோடி செய்வார்”, என்றும் விமர்சனம் செய்தார்.