தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. இதனால் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தீயணைப்புத் துறை, வருவாய்த் துறையினர் இணைந்து வெள்ள மீட்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.
அதன்படி நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றில் இன்று (செப். 15) மாவட்ட தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து வடகிழக்குப் பருவமழை போலி ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமை தாங்கினர். மேலும் நிலைய அலுவலர்கள் வீரராஜ் முருகானந்தம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் சாஸ்திரியன், 20 கமாண்டோ வீரர்கள், 30-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பருவமழை நேரத்தில் வெள்ளம் ஏற்படுவதால் ஆற்றில் அளவுக்கதிகமான நீர் வரும். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள் வெள்ளத்தில் மூழ்கினால் அவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாகச் செய்துகாட்டினர்.
குறிப்பாக நீச்சல் தெரிந்த மற்றும் தெரியாத நபர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படும்போது அவர்களைக் கண்டறிந்து உடனடியாக ரப்பர் படகுகள் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்துசென்று மீட்டு, கரைப் பகுதியில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துமனைக்கு அனுப்பிவைப்பது போன்ற ஒத்திகை நிகழ்சியையும் செய்துகாட்டினர்.
மேலும் ஆழம் குறைவான பகுதியில் ஆற்றின் இரு கரைகளிலும் கயிறு கட்டி அதன்மூலம் லைப் ஜாக்கெட்டுடன் சென்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் நபர்களை மீட்டு கரைக்கு கொண்டுவருவது போலவும் செய்துகாட்டினர்.