திருநெல்வேலி: நெல்லை சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூன் 1) புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம், அவர் வந்தால் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும், என்று கருத்து தெரிவித்திருந்தார்.
சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று பரபரப்பாக பேசப்பட்ட சூழலில் திடீரென அவர் அரசியலை விட்டு விலகி ஆன்மீக பயணம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மீண்டும் அவர் அதிமுகவை கைப்பற்ற காய் நகர்த்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன இது போன்ற சூழ்நிலையில் சசிகலாவை பாஜகவுடன் இணைத்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், சசிகலா பாஜகவில் இணைவது குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து கட்சியின் கருத்து அல்ல, என்று அண்ணாமலை தெரிவித்தார். அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில் சசிகலா பாஜகவில் மட்டுமல்ல எந்த கட்சியில் இணைந்தாலும் அந்த கட்சி வலுவடையும் என்று மீண்டும் நயினார் நாகேந்திரன் அதிரடி காட்டியுள்ளார்.