தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பதவியை இழக்கிறாரா நெல்லை மேயர்? - ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்.. நடந்தது என்ன? - DMK internal conflict

Tirunelveli Corporation: திருநெல்வேலி மாநகராட்சியில் ஆளும்கட்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஜனவரி 12ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

No confidence motion against DMK Mayor in Tirunelveli Corporation
திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 2:10 PM IST

Updated : Dec 29, 2023, 2:25 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் உள்ள 55 வார்டுகளை உள்ளடக்கிய திருநெல்வேலி மாநகராட்சிக்கு திமுகவைச் சேர்ந்த 'சரவணன்' மேயராக உள்ளார். இந்த நிலையில், திருநெல்வேலி மாநகராட்சியில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை மாற்றக்கோரி தொடர்ச்சியாக அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, திருநெல்வேலி மாநகர திமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாகவே, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது. மேயர் சரவணன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் மாநகராட்சி மன்ற கூட்டங்களில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே வெளிப்படையாக குற்றம்சாட்டி வந்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

இது தொடர்பாக வெடித்த மோதல் போக்கை கைவிடும்படி, மேயர் மற்றும் கவுன்சிலர்களை திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் எச்சரித்திருந்தார். இருப்பினும், அமைச்சர் பேச்சையும் மீறி தொடர்ந்து கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இது போன்ற சூழ்நிலையில், திருநெல்வேலி மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்படி, சுமார் 38 திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் சுபம் தாக்கரே ஞானதேவ் ராவை சந்தித்து, கடந்த சில வாரங்களுக்கு முன் மனு அளித்த சம்பவம் திருநெல்வேலி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

சட்டப்படி, 'மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்' கொண்டு வரும்படி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தால் 15 நாட்களுக்குள் அனைத்து கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்புவதுடன், ஒரு மாதத்திற்குள் சிறப்புக் கூட்டத்தை நடத்தி தீர்மானத்தை அவையில் கொண்டுவர வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.

இந்த நிலையில், கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவையில் கொண்டுவர மாநகராட்சி ஆணையர் சுபம் தாக்கரே ஞானதேவ் ராவ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 51 (2) (3)-ன் கீழ் மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் கணக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் வரும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் என ஆணையர் சுபம் தாக்கரே ஞானதேவ் ராவ் அறிவித்துள்ளார்.

ஆளுங்கட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது, இதுவே முதல்முறை ஆகும். எனவே, வரும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மன்ற கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் ஆளுங்கட்சிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் கவுன்சிலர்களை சரிகட்டும் பணிகளில் திமுக தலைமை ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனவே ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், மேயர் மீதான பகையை தீர்த்துக்கொள்ளும் வகையில் அவருக்கு எதிராக வாக்களிப்பார்களா? அல்லது கட்சி தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு மேயருக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா? என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: 'அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்' - விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்!

Last Updated : Dec 29, 2023, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details