திருநெல்வேலி:தமிழ்நாடு நகர்ப்புர் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கார் நகர் பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (அக்.15) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில், கடந்த 1996ஆம் ஆண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுத் தந்த வீடுகள் அனைத்தும் பழுதடைந்ததை அடுத்து, அவ்வீடுகளை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தி, புதிதாக 408 வீடுகள் கட்டுவதற்காக 53.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று புதிய கட்டிடப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது மக்களிடம், திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். அந்த வகையில் ஒரு வீடு 400 சதுர அடி பரப்பளவில் கழிவறை, படுக்கையறை, சமலறை ஆகிய வசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பாக கட்டப்பட உள்ளதாக தெரிவித்தனர். பின்னர் மக்களிடம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கான ஆவணங்கள் வழுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது, "பழுதடைந்த வீடுகளை அப்புறப்படுத்து அதற்கு பதிலாக சுமார் 53 கோடி மதிப்பீட்டில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. 18 மாதங்களில் இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.