திருநெல்வேலி உட்பட மூன்று மாவட்டங்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று வேளை உணவு, சத்தான பழங்கள் வழங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறார், நெல்லையைச் சேர்ந்த நிஜாம். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மறுபுறம் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைந்து நாளுக்கு நாள் வீடு திரும்பி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 63 பேர், அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு மருத்துவர்கள் சிகிச்சை ஒருபுறம் இருக்க, நெல்லையைச் சேர்ந்த நிஜாம் என்பவரின் சேவையும் இந்த கரோனா வைரஸ் தொற்றை குறைக்கும் பணியில் சேரும். நெல்லை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கே.எம்.ஏ நிஜாம், அக்கட்சித் தலைவர் வைகோவின் பாசத்திற்குரிய நபர் எனப் பெயர் பெற்றவர். அரசியல் கடந்து மக்கள் சேவையில் மிகுந்த நாட்டம் கொண்ட இவரை, செல்லமாக 'நிஜாம் மாமா' என்று அழைத்து வருகின்றனர்.
கரோனா தொற்று காரணமாக வீட்டில் முடங்கி, ஏழ்மையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி வரும் நிலையில், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வரும் முயற்சியில் இறங்கினார், நிஜாம். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளவர்கள் இந்தத் தொற்று நோயை எதிர் கொண்டு விடலாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அரசு தனிமைப்படுத்தி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.