திருநெல்வேலி:எஸ்டிபிஐ (இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராகத் இருப்பவர், நெல்லை முபாரக்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இந்த நிலையில், மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ (SDPI - Social Democratic Party of India) கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இல்லத்தில் இன்று (ஜூலை 23) தேசிய புலனாய்வு முகமை (NIA - National Investigation Agency) அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர்.
திடீரென தன் வீட்டிற்கு என்ஐஏ அதிகாரிகள் சோதனைக்கு வருவதை அறிந்த நெல்லை முபாரக் அதிர்ச்சி அடைந்தார். தற்போது காவல் துறையினரின் உதவியுடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இது குறித்து விசாரித்தபோது. கும்பகோணம் அடுத்த திருப்புவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு மதமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்புவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கு பின்னணியில் மதமாற்றம் ரீதியான பல்வேறு சர்ச்சைகள் இருப்பது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. எனவே, அதன் அடிப்படையில் நெல்லை முபாரக் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக இந்த கொலைக்கு பின்னணியில் நெல்லை முபாரக் மற்றும் அவர் சார்ந்த கட்சி செயல்பட்டதா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முக்கிய ஆவணங்கள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடையில், இந்த சோதனை குறித்து தகவல் அறிந்த எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் நெல்லை முபாரக் இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், நெல்லையைப் போன்று தமிழ்நாடு முழுவதும் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 24 இடங்களில் இன்று ஒரே நாளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பெண் காவலர் தற்கொலை! அடுத்தடுத்து நடக்கும் காவல் துறை தற்கொலைகள்.. காரணம் என்ன?