தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றுவருகிறது. தேர்தலில் கட்டாயமாக வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், வாக்குச்சாவடி மையத்திற்கு ஆர்வமுடன் வந்து வாக்களித்துச் செல்கின்றனர். முக்கியமாக வயதானவர்கள், நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், வெளிநாட்டில் இருந்து வாக்களிப்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவழித்து வந்து வாக்களித்த இந்திய இளைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் வாக்களித்து வருகின்றனர்.
வாக்களித்து வாழ்க்கை பந்தத்தை தொடங்கிய புதுமணத் தம்பதி..! - newly married couple
திருநெல்வேலி: திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து புதுமண ஜோடி வாக்களித்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலைக்கு ஒருநாள் விடுமுறை எடுத்து, வெயிலில் காய்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஏன் வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்பவர்கள் மத்தியில் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து புதுமண ஜோடி வாக்களித்தது, அனைவரின் வியப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்த முத்துராம் - சுப்புலட்சுமி தம்பதிக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்று எண்ணி தம்பதி இருவரும் வள்ளியூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தனர். நீண்ட வரிசையில் மக்களுடன் காத்திருந்து, பின்னர் தங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களித்து விட்டுச் சென்றனர். திருமண நாளில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதியை பொதுமக்கள் பலரும் பாராட்டினர். மேலும் அவர்களுக்கு திருமண வாழ்த்துகளும் தெரிவித்தனர்.