திருநெல்வேலி மாவட்டம் டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும். ஆனால் இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக மிக எளிதாக நவராத்திரி விழா நடைபெறுகிறது.
அதன்படி அருள்தரும் நவராத்திரித் திருவிழாவை முன்னிட்டு, 17.10.2020 முதல் 25.10.2020 முடிய, வழக்கம்போல் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய உற்சவ மூர்த்திகள் திருக்கோயிலின் சோமவார மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, தினமும் முற்பகல் 11 மணியளவில் உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணியளவில் சிறப்புத் தீபாராதனை நடைபெறும்.
அபிஷேகம், தீபாராதனை நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. இதர நேரங்களில் பக்தர்கள் சோமவார மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்திகளைத் தரிசிக்கவும், அங்கே வைக்கப்பட்டிருக்கும் நவராத்திரி கொலுவைப் பார்வையிடவும் அனுமதிக்கப்படுவார்கள்.