தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Nellaiappar Temple Car fest 2023: நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்; காவல்துறை வெளியிட்ட முக்கிய அட்வைஸ்! - Nellaiappar Temple Aani Thiruvizha 2023

திருநெல்வேலியில் நாளை நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 1, 2023, 6:20 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் 'ஆனித் தேரோட்டம்' 02.07.2023 ஆம் தேதி (நாளை) நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்ட பண்டிகைகளின் முக்கியமான பண்டிகை 'நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்'. குறிப்பாக திருநெல்வேலி பெயர் வருவதற்குக் காரணமான நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூறுவார்கள்.

எனவே, திருநெல்வேலியில் நாளை நடைபெறும் ஆனித்தேரோட்டத்தை (Tirunelveli Nellaiappar Temple Festival 2023) காண மக்கள் மிகவும் ஆவலோடு உள்ளனர். இந்த நிலையில், தேரோட்டத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப் பணி குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்; பலத்த பாதுகாப்பு:இது குறித்து மாநகர காவல்துறை இன்று (ஜூலை 1) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர காவல் சார்பில் கீழ்க்கண்டவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாகனங்கள் எளிதில் வந்து செல்ல ஏதுவாக வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்காணிக்க கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

புறக்காவல் நிலையம் ஆனித்தேரோட்டம் பாதுகாப்புப் பணியில் சுமார் 1,000 காவலர்களும், செயின் பறிப்பு, திருட்டு போன்ற குற்றத்தடுப்புப் பணிக்காக சாதாரண உடையில் ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுமார் 100 காவலர்களும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுமார் 150 காவலர்களும், வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவைச் சார்ந்த சுமார் 50 காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு: குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கோயிலின் உட்புறம், நான்கு ரதவீதிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் வானூர்தி கேமராக்கள் (Drone) மூலமும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி சந்திப்பு வழியாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் நெல்லை சாப்டர் மேல்நிலைப் பள்ளியிலும், சி.என். கிராமம், குறுக்குத்துறை வழியாக வரும் பக்தர்கள் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள மந்திரமூர்த்தி மற்றும் கல்லணை பள்ளிகளிலும், பேட்டை வழியாக வரும் பக்தர்கள் ரோஸ்மேரி பள்ளியிலும், அபிசேகப்பட்டி வழியாக வரும் பக்தர்கள் உழவர் சந்தையிலும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள் அனைத்து டவுன் ஆர்ச் அருகில் உள்ள தாமரைக்குளம் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்காசி செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியப்பேரி, பழையபேட்டை வழியாக செல்ல வேண்டும். இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் டவுன் ஆர்ச், தெற்கு மவுண்ட்ரோடு காட்சிமண்டபம், டிவிஎஸ் கார்னர் வழியாக செல்ல வேண்டும்.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு:செங்கோட்டை, குற்றாலத்திலிருந்து திருநெல்வேலி வரும் அனைத்து வாகனங்களும் தொண்டர் சந்நிதி, குருநாதன்கோயில் விலக்கு இராமையன்பட்டி, சங்கரன்கோவில் ரோடு, சந்திமறித்த அம்மன் கோயில், தச்சநல்லூர் ரவுண்டானா, வண்ணாரப்பேட்டை பைபாஸ் வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து முக்கூடல், பாபநாசம், கடையம் செல்லும் வாகனங்கள், ரிலையன்ஸ் சந்திப்பு, மேலப்பாளையம், முன்னீர்பள்ளம் வழியாக செல்ல வேண்டும். சந்திப்பு பஸ் நிலையத்திலிருந்து டவுன் செல்லும் பேருந்துகள் ஸ்ரீபுரம், டவுன் ஆர்ச், புதுரோடு வழியாக அருணகிரி தியேட்டர் அருகே தற்காலிகப் பேருந்து நிறுத்தத்திலிருந்து பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் அதே வழியாக எஸ்.என். ஹைரோட்டை பயன்படுத்திச் செல்ல வேண்டும். மீட்பு மற்றும் அவசர கால நடவடிக்கைக்காக, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் டவுன் ஆர்ச், சொக்கப்பனை சந்திப்பு, சத்தியமூர்த்தி தெரு வழியாக செல்ல வேண்டும்.

தென்காசியிலிருந்து வரும் மீட்பு மற்றும் அவசர கால வாகனங்கள் தொண்டர் சந்நிதி, புட்டரத்தி அம்மன் கோயில், நயினார்குளம் சாலை, டவுன் ஆர்ச் வழியாக செல்ல வேண்டும். தேரோட்டத்தின்போது, நான்கு ரத வீதிகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஊதல்கள் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒலி மாசின் காரணமாக மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாக தெரியவருவதால் அந்த ஊதல்களை விற்கவோ, பயன்படுத்தவோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனித் தேரோட்டம் சிறப்பாக நடைபெற பொதுமக்களும் மற்றும் அனைவரும் எவ்வித பேதமும் இன்றி காவல் துறையினர் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழாவில் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உள்ளிட்ட 5 தேர்களின் தேரோட்டம் நடக்கும். மேலும், 32 ஆண்டுகளுக்குப் பின் சுவாமி - அம்பாள் உள்ளிட்டோரின் வரலாற்று ஓவியங்கள் அடங்கிய தேர் வீதியுலா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரூரில் விதிமுறைகளை மீறிய கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details