திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி படுகொலைசெய்யப்பட்ட கைதி முத்து மனோவின் உடலை வாங்க மறுத்து 55 நாள்களாக உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மேலும் மத்திய சிறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர். இதற்கிடையே முத்து மனோ கொலை சம்பவத்தின்போது பணியில் அஜாக்கிரதையாகச் செயல்பட்ட 7 சிறை அலுவலர்கள், சிறைக் காவலர்கள் முன்னதாகவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிறைக் கண்காணிப்பாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் முத்து மனோ குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜூன் 14) முருகன், கார்த்திக், அம்மு ஆகிய மூன்று இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் மூவரும் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'எதிர்க்கட்சித் தலைவராக கேள்வி எழுப்பிய உங்கள் மனச்சான்றை உலுக்கவில்லையா?' - சீமான்