நெல்லை: நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மூன்றாவது மகள் சந்தியா(18). இவர் நெல்லை டவுன் கீழ ரத வீதியில் உள்ள ராஜம் டாய்ஸ் அண்ட் ஃபேன்சி என்ற கடையில் பணி செய்து வந்துள்ளார். அப்போது, கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை, காந்திமதி அம்மன் கோவில் அருகே அமைந்திருக்கும் குடோனில் இருந்து எடுத்து வருவதற்காக சந்தியா குடோனுக்கு சென்றுள்ளார்.
வெகுநேரம் ஆகியும் சந்தியா கடைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உடன் பணி செய்யும் நபர்கள், குடோனுக்கு சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் சந்தியா கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, நெல்லை டவுன் போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, காவல் உதவி ஆணையாளர் சுப்பையா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சந்தியாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிக வணிக நிறுவனங்களும், ஆள் நடமாட்டமும் உள்ள அப்பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் காரணமாக, கீழ ரத வீதி பகுதியில் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெருக்கடியும் நிலவியது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக, அக்கடையில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த சந்தியாவின் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சரவணகுமார் ஆய்வு நடத்தி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொள்ளவும், குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டுள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது.