நெல்லை : சிங்கம்பட்டி அடுத்த மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(19). இவர் இன்று அதே பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கி பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து கல்லிடைகுறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த கல்லிடைகுறிச்சி காவல் துறையினர், ரமேஷின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் ரமேஷ் காதல் பிரச்சினையில் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ் அதே பகுதியை சேர்ந்த வேறு சமூக பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அதனால் பெண்ணின் உறவினர்கள் ரமேஷை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாகவும் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கல்லிடைகுறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி கூறுகையில், ”ரமேஷ் வேலைக்கு செல்லாமல் சுற்றி திறந்துள்ளார். இதனால் அவரது தாய், சகோதரர்கள் கண்டித்துள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. காதல் விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரியவில்லை. காதல் பிரச்சனை தொடர்பாக இரு வீட்டாரும் பேசி சுமூகமாக முடிவெடுத்து விட்டனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்”என்றார்.
இதையும் படிங்க : நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் - ரூ. 2 லட்சம் மதிப்பிலான வலை பறிப்பு