நெல்லை டவுண் சாலைக்கு “நெல்லை கண்ணன்” பெயரை சூட்டியது தமிழ்நாடுஅரசு திருநெல்வேலி:நெல்லை டவுனைச் சேர்ந்தவர், நெல்லை கண்ணன். பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், இலக்கியவாதி, அரசியல் பேச்சாளர் என நெல்லை கண்ணன் பன்முகத் திறமை கொண்டவர். குறிப்பாக, காரமராஜர், கருணாநிதி, கண்ணதாசன் மற்றும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் போன்ற தலைவர்களுடன் நெருங்கி பழகியவர்.
மேலும், இவர் தனது மேடைப்பேச்சுகளில் அதிரடியாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து பொது மேடையில் அவதூறு பேசியதாகக் கூறி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும், நெல்லை உள்ளூர் வழக்காடு மொழியில் பேசும் இவரது பேச்சு பலரும் ரசிக்கும் வகையில் இருக்கும். காமராஜர் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர். எனவே, அனைத்து மேடைகளிலும் காமராஜரைப் பற்றி பெருமையாக பேசுவார். குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதியே போன்ற நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக, இவர் எழுதிய குறுக்குத்துறை ரகசியங்கள் என்ற நூல் மிகவும் பிரபலமானது. நெல்லை கண்ணன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த நெல்லை கண்ணனின் நினைவாக நெல்லை டவுண் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலையில் இணையும் தென் வடல் சாலைக்கு நெல்லை கண்ணனின் பெயரை சூட்ட நெல்லை மாநகராட்சி முடிவு செய்தது.
இது குறித்து கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். ஆனால், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் அத்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நெல்லை கண்ணன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக திட்டியவர். எனவே, அவரது பெயரை சாலைக்கு சூட்டக் கூடாது என்று கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், நெல்லை கண்ணன் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மறைந்த கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பல மேடைகளில் பேசியிருந்தார். குறிப்பாக, சென்னை சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து நெல்லை கண்ணன் போட்டியிட்டார். எனவேதான் திமுகவினர் நெல்லை கண்ணனுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதேநேரம், அரசின் உத்தரவு காரணமாகவே சாலைக்கு அவரது பெயரை சூட்ட மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
எனவே, திமுக தலைமை இந்த விவகாரத்தில் கவுன்சிலர்களை அமைதியாக இருக்கும்படி எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயரை சூட்ட மாநகராட்சி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
இதையடுத்து அந்த சாலைக்கு ‘நெல்லை கண்ணன்’ பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. இதையொட்டி ‘நெல்லை கண்ணன் சாலை’ என எழுதப்பட்டிருந்த பெயர் பலகையை நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பெயர் பலகை முன்பு செல்பி எடுத்துக் கொண்டனர்.
இது குறித்து நெல்லை கண்ணனின் மகன் கூறுகையில், தனது தகப்பனாரின் முதலாமாண்டு நினைவு நாளான இன்று, நெல்லை டவுண் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயரை சூட்ட முடிவு செய்து, இதை அறிவித்து பெயரை சூட்டியது தங்களது குடும்பத்திற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பெயரைச் சூட்ட முடிவு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மதிப்பீட்டுக் குழுவினரிடம் அடுக்கடுக்காக புகார் அளித்த அரசுப் பள்ளி மாணவிகள்.. நெல்லையில் நடந்தது என்ன?