நெல்லை மாவட்டத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றனர். அந்த வகையில் ஒடிசா, ஆந்திரா, மும்பை, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 5,000பேர் இதுவரை சொந்த ஊர் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சிலர் நேற்று மாலை அவர்கள் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். தங்களுடன் பணிபுரிந்த பலர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்றுவிட்டதாகவும் தங்களை மட்டும் ரயிலில் இடம் இல்லை எனக் கூறி இறக்கிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லாமல் தவிப்பதால் உடனடியாக தங்களை சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அலுவலர்களிடம் முறையிட்டனர்.