திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்தன. இதில், அப்போது பணியில் இருந்த ஆறு ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். இவர்களைத் தவிர, மூன்று ஹிட்டாச்சி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகளும் கற்குவியலுக்குள் சிக்கியது. உடனடியாக எடுக்கப்பட்ட மீட்புப்பணிகளால், நேற்று முன்தினம் வரை மூவர் உயிரிழந்த நிலையிலும், இருவர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆறாவது நபரான ஓட்டுநர் ராஜேந்திரனை மீட்கும் பணி நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இவரது உடல் இருக்கும் பகுதியை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மேலும், துர்நாற்றம் வீசும் இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பாறைக்கு அடியில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, அந்தப் பாறையை வெடிவைத்து தகர்த்து உடலை மீட்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாறையில் 32-க்கு மேற்பட்ட இடங்களில் துவாரங்கள் போடப்பட்டு, அதில் வெடி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோவிற்கும் அதிகமான வெடி மருந்து பாறையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து பாறைகளை அகற்றிவிட்டு உடலை மீட்கும் பணி நடைபெறும்.
நெல்லை கல்குவாரி விபத்து - பாறைகளை வெடி வைத்து தகர்க்க திட்டம்! இதற்கிடையில், பாறை வெடி வைத்து தகர்க்கப்பட இருப்பதால் குவாரியின் 500 மீட்டர் சுற்றளவிற்குள் யாரும் நுழையக்கூடாது என காவல் துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்காக, காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதேநேரம், விபத்து நிகழ்ந்த கல்குவாரி உரிமையாளர் செல்வராஜின் திசையன்விளை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. தற்போது இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:குவாரி விபத்து: உரிமையாளருக்குச் சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை; வங்கிக் கணக்குகள் முடக்கம்