திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் வெங்கடேஸ்வரா தனியார் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதற்காக மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டன. பின்னர், மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணியாளர்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகு மூன்று பேர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீதமுள்ள மூன்று பேரின் நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக நெல்லையில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜ கண்ணப்பன், வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த், கனிமவளம் இயக்குநர் நிர்மல் ராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
நெல்லை கல்குவாரி விபத்து.. தமிழ்நாடு முழுவதும் ட்ரோன் மூலம் கல்குவாரிகள் ஆய்வு - அமைச்சர் கூட்டாக பேட்டி அப்போது, “தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை மற்றும் கனிமவளத் துறை இணைந்து அனைத்து குவாரிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் கடந்த ஏப்ரல் மாதம் சுரங்கம் அமைப்பதற்கு கனிம வளத்துறை தடை விதித்திருந்த நிலையில், இந்த விபத்து நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 55 குவாரிகள் இருந்த நிலையில், தற்போது மூன்று செயல்படாமல் உள்ளது.
எஞ்சியுள்ள 52 குவாரிகளில் கடந்த ஆறு மாதங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இதன் மூலம் ஆறு குவாரிகள் பல்வேறு காரணங்களால் தடைசெய்யப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதில் முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரிகள் மீது 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 60 நாட்களில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் ட்ரோன் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதற்கு தடை விதிப்பது சம்பந்தமாக முதலமைச்சரிடம் பேசி தெளிவான ஒரு முடிவு எடுப்போம்” எனக் கூட்டாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க:நெல்லை கல்குவாரி விபத்து - வருவாய்த்துறை செயலாளர் மற்றும் கனிமவளத் துறை இயக்குனர் நேரில் ஆய்வு