திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே நியாய விலைக்கடையின் அரிசியை சட்டத்திற்கு புறம்பாக கேரள மாநிலத்திற்கு கடத்த முயல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் பேட்டை, சீதற்பநல்லூர் காவல்துறையினர் நேற்று இரவு (செம்டம்பர் 5) தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர், அப்போது சிதற்பநல்லூர் அருகே தென்காசி முக்கிய சாலையில் ஆம்னி கார் ஒன்று சந்தேகத்துக்கிடமான வகையில் சென்றது. காவல்துறையினர் அந்த காரை மடக்கி சோதனை செய்தபோது உள்ளே நியாய விலைக்கடையின் அரிசி மூட்டை மூட்டையாகக் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்ததுடன் காரில் இருந்த பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரஹிம் (27), ஜின்னா (28) ஆகிய இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து சில நிமிடங்களில் டாட்டா ஏசி கார், லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட அரிசியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வடக்கு தெருவைச் சேர்ந்த செல்வம் (30), பள்ளக்கால் புதுக்குடியைச் சேர்ந்த மூக்காண்டி (48), பேட்டையைச் சேர்ந்த செய்யது அலி (42), காசிம் மைதீன் (40) ஆகிய நான்கு பேரை கைது செய்து அரிசியுடன் அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
நேற்று மட்டும் மூன்று வாகனங்களில் கடத்தப்பட்ட இரண்டு டன் நியாய விலைக்கடை அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து உணவு வழங்கல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு நியாய விலைக்கடையின் அரிசி கடத்தப்படும் சம்பவம் நடைபெறுகிறது. இதை தடுப்பதற்கு தற்போது நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தொடர் கண்காணிப்பில் ஈடுபடும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக கல்லால் அடித்துக் கொலை செய்த நபர்கள் கைது - உறைய வைக்கும் சிசிடிவி காட்சி