கரோனா தொற்றால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால் பேருந்து போக்குவரத்து, ரயில், விமான சேவைகள் தடைசெய்யப்பட்டன. தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அக்டோபர் 15ஆம் தேதி நாடு முழுவதும் பொது பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை, மாநகராட்சிப் பகுதியில் மட்டும் சுமார் 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் அன்றாடப் பணி சுமைகளுக்கு இடையே மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் மாநகராட்சி பூங்காக்களை அதிகளவு பயன்படுத்துகின்றனர். திருநெல்வேலியில் பொதுமக்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் 182 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பாளையங்கோட்டை வ.உ.சி பூங்கா, மேலப்பாளையம் பகுதியில் உள்ள பூங்காக்களை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இங்கு தினமும் அதிகாலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது, புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கரோனா ஊரடங்கால் பூங்கா அனைத்தும் மூடப்பட்டதால், கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் சிரமப்பட்டனர். இருப்பினும், சிலர் தங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் அன்றாட நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.
கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை அடுத்து திருநெல்வேலியில் பூங்கா அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மீண்டும் பூங்கா பக்கம் தலை காட்டத் தொடங்கியுள்ளனர். பாளையங்கோட்டை வ.உ.சி பூங்கா, மேலப்பாளையம் பகுதியில் உள்ள பூங்காக்களில் கரோனாவிற்கு முன்பு அதிகமானோர் வந்த நிலையில், தற்போது கரோனா தொற்றால் பொதுமக்கள் வர தயங்குகின்றனர். இதற்கு திருநெல்வேலியில் உள்ள பூங்காக்களில் மத்திய அரசின் விதிமுறைகளின்படி கரோனா தடுப்பு நடவடிக்கை துளியளவு கூட செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, பூங்காவிற்கு வருபவர்களுக்கு சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என்பதைப் பார்வையிட அலுவலர்களும் இல்லை. அதேபோல் பூங்காக்களை திறக்க மாநகராட்சி தெரிவித்தாலும்கூட பெரும்பாலான பூங்காக்கள் மூடிய நிலையிலேயே உள்ளன.
அதிகமானோர் வரும் பாளையங்கோட்டை வ.உ.சி பூங்கா பூட்டப்பட்டு இருப்பதால், சிறுவர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று விளையாடி வருகின்றனர். மேலும் சிலர் அந்தப் பூங்காவின் சுழற்கதவு வழியாக சிரமப்பட்டு வந்து செல்கின்றனர். பாளையங்கோட்டை மகாராஜா நபர் உழவர் சந்தை பின்புறம் உள்ள மற்றொரு மாநகராட்சி பூங்காவின் நிலைமை, இதை விட மோசமாக உள்ளது. இந்தப் பூங்காவானது கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாததால் சமூக விரோதிகள் நுழைந்து, மது அருந்துவது உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பூங்கா அருகே பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. அப்படியே சில பூங்கா திறந்திருந்தாலும் கழிவறை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் பெண்கள் பெரும் சிரமப்படுகின்றனர். அடுத்ததாக மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு கழிவறையும் பூட்டியே கிடக்கிறது.