திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அடுத்த ஆயன்குளம் பகுதியில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அதிசய கிணறு ஒன்றில் தினசரி 50 கன அடி தண்ணீர் ஒரு மாதத்திற்கு மேலாக விடப்பட்டும், நிரம்பாமல் அருகிலுள்ள கிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தியது. இது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த கிணற்றின் நீர்போக்கு இருந்தது தெரிய வந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் இந்த கிணறு பற்றி ஆராய்ச்சி செய்ய சென்னை ஐஐடி குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்ற ஐஐடி குழுவினர், கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக களப்பணிகளை மேற்கொண்டனர்.
இதில் திசையன்விளை ஆயன்குளம் படுகையில் உள்ள அதிசய கிணற்றைபோல், சுற்று வட்டார பகுதியில் மேலும் 14 கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு முதற்கட்டமாக ஆராய்ச்சி செய்ததில், சுண்ணாம்பு பாறைகளால் ஆன இப்பகுதியில் பூமிக்கு அடியில் பெரிய நிலத்தடிநீர் ஓடைகளைக் கொண்ட குகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
மழைநீர் மற்றும் நிலத்தடிநீர் சுண்ணாம்பு பாறைகளில் உள்ள கனிமங்களுடன் வேதி வினைகளில் ஈடுபட்டு, இதுபோல நிலத்தடிநீர் ஓடைகள், பாதாளக் குகைகள் பூமிக்கு அடியில் ஏற்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சுண்ணாம்பு பாறைகள், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட குகைகள் மற்றும் குகைகளின் நிலத்தடி நீரோடை வளையமைப்பை உருவாக்கி உள்ளது.
இந்த நிலத்தடி நீரோடை வளைய அமைப்புகளில் பாதாள நீர் ஓடைகள் ஏற்பட்டு, நீர் பாய்ந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது. இவை தொழில்நுட்ப ரீதியாக ‘கார்ஸ்ட் நீர்நிலை அமைப்புகள்’ என்று அழைக்கப்படுகின்றன. முதற்கட்டமாக மீள் நிரப்பு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆயன்குளம் பகுதியில் உள்ள நிலத்தடிநீர் மட்டத்தை சுமார் 30 முதல் 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்த அதிசய கிணற்றை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ஐஐடி பேராசிரியர் குழுவினர் தீயணைப்பு துறையினரை கிணற்றுக்குள் இறக்கி நவீன ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். பூமிக்கு கீழே நீர்வழிப் பாதையை மேம்படுத்துவதற்காகவும், நிலத்தடிநீர் மட்டத்தை அதிகரித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போதைய ஆய்வின்படி, சராசரியாக 50 முதல் 60 கன அடி தண்ணீரை உள்வாங்கும் திறன் கொண்டதாக அதிசய கிணறு உள்ளது. இந்த ஆய்வினை மேற்கொண்டு மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை இந்த கிணறு வழியாக செலுத்தும்போது, 30 முதல் 40 கிலோமீட்டர் வரையிலான சுற்றளவிற்கு நிலத்தடிநீர் மட்டம் கணிசமாக உயரும்.