திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சிக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 55 வார்டுகளில் 50 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளரான பி.எம்.சரவணன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த மேயர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சுப்பிரமணியன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மற்றொரு கவுன்சிலர் ஆகிய இருவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது புதிய மேயர் பதவி ஏற்பு விழா நெல்லை மாநகராட்சி ராஜாஜி மஹாலில் நடைபெற்றது.
அப்போது மேயராகத் தேர்வு செய்யப்பட்ட சரவணன், நெல்லை மாநகராட்சியின் ஆறாவது மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவர் இதற்கான கோர்ட் அணிந்து வந்தார். அவரை திமுக மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் வரவேற்று மேயர் இருக்கையில் அமர வைத்தார்.
பின்னர் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் மேயர் சரவணனுக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஆணையர் மேயருக்கான செங்கோலை சரவணனிடம் வழங்கினார். பின்னர் மேயர் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. திமுக தலைமை நெல்லை மாநகராட்சி துணை மேயராக 1ஆவது வார்டில் வெற்றி பெற்ற ராஜுவை அறிவித்தது. இதையடுத்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ராஜுவைத் துணை மேயராக ஒருமனதாகத் தேர்வு செய்தனர்.