திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கூடங்குளம் அருகிலுள்ள செட்டிகுளத்தில் குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்குதான் 80 விழுக்காடு ஊழியர்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த குடியிருப்பில் கார் பார்க்கிங் பகுதியில் இன்று (செப்டம்பர் 11) ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், கூடங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடம் வந்த காவலர்கள் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்த பைஜீ என்பதும், அவர் அணுமின் நிலையத்தில் போர் மேன் ஆக பணிபுரிந்து வந்தார் என்பதும் தெரியவந்தது.