புத்தகத்திருவிழாவில் பிறந்தநாள் கொண்டாட்டம் - சிறைவாசிகளுக்காக புத்தகங்களை வழங்கிய சிறுமி! நெல்லை: நெல்லையில், ஆறாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 110 அரங்கங்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதில், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறை சார்பில் அரங்கம் அமைத்து, சிறை வாசிகளுக்காக புத்தகங்கள் தானமாக பெறப்பட்டு வருகிறது. இந்த அரங்கில் மாணவ மாணவிகள், பொதுமக்கள் எனப் பலரும் சிறைக்கைதிகளுக்காக புத்தகங்களை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை வல்லவன் கோட்டையைச் சேர்ந்த கொம்பையா - மாரி ப்ரியா தம்பதியின் மகளான யாஷிகா என்ற 10 வயது சிறுமி, பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். புத்தக அரங்கில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். இதில், சிறுமியின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள், சிறைத்துறையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை சிறைவாசிகளுக்காக யாஷிகா தானமாக கொடுத்தார். சிறுமிக்கு சிறைத்துறை கண்காணிப்பாளர் சங்கர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். சிறுமிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். புத்தகங்களை நன்கொடையாக கொடுத்தது மகிழ்ச்சியளிப்பதாக சிறுமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஏற்றமிகு ஏழு திட்டங்கள்" கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!