நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோரை 23ஆம் தேதி மதியம் அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இது குறித்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல்வேறு கோணங்களில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அப்பகுதி உணவகம் ஒன்றின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான திமுக கொடிகட்டிய ஸ்கார்பியோ கார் ஒன்று அந்தப் பகுதியை கடந்துசென்றது தெரியவந்தது. மேலும், அந்தக் காரிலிருந்த கைப்பேசி எண்ணிலிருந்து அங்கிருந்த கோபுர சமிக்ஞையில் (Cellphone Tower Signal) அதிக நேரம் பேசியதும் தெரியவந்தது.
இதனை வைத்து விசாரித்ததில், அங்கு நின்றிருந்த காருக்கும் கைப்பேசிக்கும் சொந்தக்காரர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பதும் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் இதனையடுத்து, காவல் துறையினர் கார்த்திகேயனை பிடித்து பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து விசாரணைநடத்தினர். இதில், தான் குற்றவாளி என கார்த்திகேயன் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், கொலையில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இரு முறை ரூ. 50 லட்சம் வரை பணம் கொடுத்தும் சீட் கிடைக்காத விரக்தியில் இந்தக் கொலை நடைபெற்றிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல் துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.