திருநெல்வேலி:ஓய்வு பெற்ற மின்வாரிய ஓட்டுனர் அழகு ரத்தினம் (70) என்பவர் நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் தியாகராஜ நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் புதிய குடிநீர் இணைப்பு கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக அழகுரத்தினம் மாநகராட்சிக்கு 6 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார்.
ஆனாலும் மாநகராட்சி இவருக்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இதையடுத்து மீண்டும் 6 ஆயிரத்து 500 ரூபாய் கட்டியுள்ளார். இரண்டு முறை கட்டணம் செலுத்திய பின்பும், மாநகராட்சி குடிநீர் இணைப்பு வழங்காததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இரண்டு முறை மாநகராட்சிக்கு பணம் செலுத்திய விவகாரம் தொடர்பாக, நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு அழகு ரத்தினம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "புதிய குடிநீர் இணைப்பு கேட்டு மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். இதற்காக முதலில் மாநகராட்சிக்கு 6 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்தினேன். ஆனாலும் மாநகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.
மீண்டும் 6 ஆயிரத்து 500 ரூபாய் கட்டினேன். ஆனால், இரண்டு முறை கட்டணம் செலுத்திய பின்பும், மாநகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர் இணைப்பு வழங்கும்படி உத்தரவிட வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டது.