நெல்லை :முன்னீர் பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் என்ற கிராமத்தில் வெங்கடேஷ்வரா என்ற தனியார் குவாரி இயங்கி வருகிறது. சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் இந்த கல் குவாரியில், நாள்தோறும் வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு கற்கள் எடுக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று முன்தினம் 300 அடி ஆழம் கொண்ட குவாரிக்கு அடியில் கற்களை அள்ளும் பணியில் லாரி டிரைவர்கள் செல்வகுமார் ராஜேந்திரன் கிட்டாச்சி ஆப்ரேட்டர்கள் செல்வம் முருகன் விஜய் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய ஆறு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலே இருந்து திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததால் கற்களின் இடிபாடுகளுக்குள் 6 பேரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து பாளையங்கோட்டை நாங்குநேரி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆறு பேரில் முருகன் மற்றும் விஜய் உள்ளிட்ட ஆகிய 3 பேர் நேற்று தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலன் இன்று உயிரிழந்தார். எஞ்சிய 3 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குவாரியை சுற்றியுள்ள பாறைகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படலாம் என்ற அச்சம் இருப்பதால் கூடுதலாக வீரர்களை களமிறக்க அதிகாரிகள் தயங்கி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை சரக டிஜஜி ஆகிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்திய கப்பற்படையிடமிருந்து உதவி கேட்கபட்டு ஐஎன்எஸ் பருந்து என்ற ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டது. ஆனால் சிக்கலான பகுதி என்பதால் தங்களால் முடியாது என ஹெலிகாப்டர் திரும்பி சென்று விட்டது. தொடர்ந்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.