தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவகாரம்.. சுற்றுலா செல்லும் கவுன்சிலர்கள்..? வாக்கெடுப்பு நடக்குமா? நெல்லையில் நடப்பது என்ன? - கூவத்தூர் சம்பவம்

Nellai councillor issue: நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை (ஜன. 12) நடைபெற உள்ள நிலையில் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் நடப்பது என்ன
நெல்லையில் நடப்பது என்ன

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 10:08 PM IST

நெல்லையில் நடப்பது என்ன

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன இதில் 45 வார்டுகளில் திமுக உறுப்பினர்களும் மீதமுள்ள 10 வார்டுகளில் அதிமுக 4, காங்கிரஸ் 3, மதிமுக 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, மனிதநேய மக்கள் கட்சி 1 என கவுன்சிலர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கும், மற்ற திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவுவதாக கூறப்படுகிறது. ஆளுங்கட்சியால் நியமிக்கப்பட்ட மேயரை மாற்றும்படி ஆளுங்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்புக்கு எதிராக மேயர் செயல்பட்டது, நிதி ஒதுக்குவதில் மேயர் பாரபட்சம் காட்டியது உட்பட மோதலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மேயரை மாற்றக் கோரி ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சென்னை வரை சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்து மனு அளித்தனர்.

பிரச்சினை பெரிதானதால் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவை அனுப்பி பிரச்சினை செய்யும் கவுன்சிலர்களை சமாதானப்படுத்த திமுக தலைமை முயற்சி செய்தது. அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் மேயர் மீது திமுக கவுன்சிலர்கள் சுமார் 38 பேர் சமீபத்தில் அதிரடியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஒட்டுமொத்தமாக சுமார் 70% கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதை அடுத்து கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது வரும் 12ம் தேதி (நாளை) வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிவித்திருந்தார். இதனால் திமுக தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பிரச்சனைக்குரிய கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லைக்கு வருகை தந்து கவுன்சிலர்கள் மற்றும் மேயர் சரவணன் துணை மேயர் ராஜூ ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மேயரை முதலமைச்சர் நியமித்துள்ளார் எனவே அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீநு நடக்கும் வாக்கெடுப்பில் யாரும் கலந்து கொள்ள கூடாது மீறி கலந்து கொண்டால் கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சரின் எச்சரிக்கையை தொடர்ந்து தீர்மானத்தை கொண்டு வந்த கவுன்சிலர்களே தற்போது கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் கவுன்சிலர்கள் மனம் மாறி கூட்டத்தில் கலந்து கொண்டால் பெரும் நெருக்கடி ஏற்படும் என்பதால் திமுக கவுன்சிலர்களை தற்போது வெளியூர்களுக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி திமுக கவுன்சிலர்கள் சுமார் 25 பேர் கேரளாவுக்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது மீதமுள்ள கவுன்சிலர்கள் விருதுநகருக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து 27வது வார்டு கவுன்சிலர் உலகநாதனை ஈடிவி பாரத் தமிழ் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, கட்சி தலைமை உத்தரவை மீறி நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட மாட்டேன் என்று கூறினார்.

ஆளுங்கட்சியால் நியமிக்கப்பட்ட மேயரை ஆளுங்கட்சி கவுன்சிலர்களிடம் இருந்து காப்பாற்ற இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நெல்லை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது நெருங்கிய தோழி சசிகலா அதிமுக கட்சியை கைப்பற்றினார்.

அப்போது அவர் முதலமைச்சராக முயற்சி எடுத்த நிலையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சென்னை அருகே கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் அடைத்து வைத்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது நெல்லையில் ஆளுங்கட்சியால் நியமிக்கப்பட்ட மேயரை காப்பாற்ற ஆளும் கட்சி கவுன்சிலர்களை ஆளுங்கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்டுப்பாட்டில் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மீண்டும் கூவத்தூர் சம்பவத்தை நினைவு கூறுவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகரை தேர்வு செய்தது ஏன்?:நேற்று வரை திமுக கவுன்சிலர்கள் சக கவுன்சிலரான பவுல்ராஜ் என்பவரது கட்டுப்பாட்டில் கேரளாவுக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து இன்று முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் சில கவுன்சிலர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் யாரையும் நம்ப முடியாது என்ற சூழல் அரசியலில் நிலவி வருவதால் அனைத்து கவுன்சிலர்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொறுப்பை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கையில் எடுத்துள்ளார். அதன்படி அமைச்சரின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் என்பதால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள ரகசிய இடத்தில் கவுன்சிலசர்கள் நாளை வரை தங்க வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நாளை மாலை அங்கிருந்து அவர்கள் மீண்டும் நெல்லை அழைத்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

தீர்மானத்தின் முடிவு:உள்ளாட்சி சட்ட விதிகளின்படி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு வாக்களிக்கும் பட்சத்தில் மேயருக்கு எதிராக அதிக வாக்குகள் இருந்தால் மேயர் பதவி பறிக்கப்படும். அதே சமயம் ஒட்டுமொத்தமாக கவுன்சிலர்கள் வாக்கெடுப்பு கூட்டத்தை புறக்கணித்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்து விடும்.

மீண்டும் மேயர் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்றால் ஒரு வருடத்திற்கு பிறகு தான் கொண்டு வர முடியும். எனவே நெல்லையில் தற்போது கவுன்சிலர்கள் நாளை நடைபெறும் வாக்கெடுப்பு கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதால் தீர்மானம் தோல்வியில் முடியும் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் இனிமேல் அடுத்த ஓராண்டுக்கு பிறகு தான் நெல்லை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!

ABOUT THE AUTHOR

...view details