நெல்லை: ஒரு வாரத்திற்குப் பிறகு தடுப்பூசி போடுவதால் தடுப்பூசி மையங்களில் குவிந்த பொதுமக்கள்.
தமிழ்நாடு முழுதும் கடந்த ஒரு வாரமாக கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு நேற்றிரவு ஏழாயிரத்து 800 கோவிஷீல்டு, ஆயிரம் கோவாக்சின் என மொத்தம் எட்டாயிரத்து 800 கரோனா தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதையடுத்து இந்தத் தடுப்பூசிகள் அனைத்தும் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் வரதராஜன் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் உள்ள 84 தடுப்பூசி மையங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது.
இதற்கிடையில் ஒரு வாரத்திற்குப் பிறகு தடுப்பூசி போடப்படும் தகவலை அறிந்து நெல்லை மாநகர் பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்களில் காலை முதல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாகத் திரண்டதால் கூட்டத்தினரைச் சமாளிக்க முடியாமல் செவிலியர் திணறினர்.
நெல்லை தடுப்பூசி மையங்களில் குவிந்த மக்கள் மிகக் குறைவான அளவே தடுப்பூசி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மையத்திற்கும் தலா 100 தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதேசமயம் நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட வந்துள்ளதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 500 பேர் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மக்கள் விரோதப்போக்கை கடைப்பிடித்துவரும் ஒன்றிய அரசு!'