திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு இருந்துவரும் நிலையில், பிசான பருவ சாகுபடிக்காக 1 மற்றும் 2ஆவது ரீச் கால்வாயில் தண்ணீர் திறந்து விடாததால், விவசாய பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் காய்ந்து போனதாக கூறி திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காய்ந்துபோன விவசாய பயிர்களை கையில் ஏந்தியபடியும், கழுத்தில் காய்கறி மாலையாக அணிந்தபடியும் வந்திருந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் போராட்டம் இதுகுறித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் செய்தியாளர்களிடையே கூறுகையில், மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு 110 அடியை நெருங்குகிறது. ஆண்டுதோறும் அணையின் 1 மற்றும் 2ஆவது கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் இந்த ஆண்டு விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் தண்ணீர் திறக்கவில்லை.
விவசாயிகள் போராட்டம் நடத்த இருந்தனர். ஆனால் அலுவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை தடுத்துவிட்டனர். எனவே, அணையில் தண்ணீர் திறப்பதே தொடர்பாக வரும் 3ஆம் தேதிக்குள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 4ஆம் தேதி திருநெல்வேலி வரும் முதலமைச்சர் பழனிசாமிக்கு நாங்கள் அறவழியில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தொடர் கனமழை: மணிமுத்தாறு அணையின் நீர்வரத்து அதிகரிப்பு!