பேட்டை (நெல்லை): நெல்லை மாவட்டம் பேட்டை அபிஷேகப்பட்டியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ். கட்டுமான தொழில் அதிபரான இவர், கடந்த 22-ஆம் தேதி டவுண் பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து தனது பேத்தியை அழைத்துச் வருவதாக கூறிச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
மறுநாள் ஜேக்கப் ஆனந்தராஜ் கடத்தப்பட்டதாக தொலைபேசியில் அழைத்த நபர் 10 லட்ச ரூபாய் கேட்டு அவரது குடும்பத்தினரை மிரட்டி உள்ளார். இதையடுத்து ஜேக்கப் ஆனந்தராஜின் மகள் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள குளத்தில் உடல் ஊதிய நிலையில் ஜேக்கப் ஆனந்தராஜ் சடலமாக மீட்கப்பட்டார். கடத்தப்பட்டதாக கண்டறியப்பட்ட ஜேக்கப் ஆனந்தராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
வழக்கு குறித்து விசாரித்து வந்த போலீசார் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். போலீசார் தரப்பு கூறுகையில், ஜேக்கப் ஆனந்தராஜ் நரசிங்கநல்லூரை சேர்ந்த தேவி என்பவருடன் தகாத உறவில் இருந்ததாகவும், அதேசமயம் தேவி, தனது கணவர் மற்றும் ஜேக்கப் ஆனந்தராஜ் ஆகியோரின் கண்களில் மண்ணை தூவி விட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த பிரின்ஸ் என்பவருடன் ரகசிய உறவு வைத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
ரகசிய உறவுகள் குறித்து அறிந்த தேவியின் கணவர் பிரிந்து செல்லவே பிரின்ஸ் உடன் நரசிங்கநல்லூர் வீட்டில் தேவி குடும்பம் நடத்தி வந்ததாகவும், பிரின்ஸ் இல்லாத சமயத்தில் ஜேக்கப் ஆனந்தராஜுடனும் தேவி உறவு வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.