தென்காசி மாவட்டம் சிவகிரி ஆய்வாளர் கோவிந்தன் நேற்று (பிப். 8) தனது ஓட்டுநர் ஜெரால்டு சேவியருடன் காவல் துறை வாகனத்தில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்கு அலுவல் பணி தொடர்பாகச் சென்றுவிட்டு மாலை சிவகிரிக்குப் புறப்பட்டனர்.
அதேபோல் நெல்லை சாந்திநகரைச் சேர்ந்த ரஞ்சித் (45) தனது நண்பர்கள் சவுந்தர், சாலமோன் ஆகியோருடன் செங்கோட்டையில் திருமண நிகழ்ச்சிக்குப் புகைப்படம் எடுக்கச் சென்றுவிட்டு காரில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, நெல்லை சீதபற்பநல்லூர் அடுத்த புதூர் கிராமம் அருகே தென்காசி நோக்கிச் சென்றபோது ஆய்வாளர் சென்ற வாகனமும், எதிரே வந்த ரஞ்சித் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. கார் ஓட்டிவந்த ரஞ்சித்தின் கால்கள் காரின் முன்பகுதியில் சிக்கிக்கொண்டது. தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து காரின் முன்பகுதியை உடைத்து இடிபாட்டில் சிக்கிய ரஞ்சித்தை மீட்டனர்.
காரின் பின்பகுதியில் இருந்த சவுந்தர், சாலமோன் ஆகியோருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மூவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டனர்.
காவல் துறை வாகனத்தின் முன்பகுதியில் இருந்த சிவகிரி, ஆய்வாளர் கோவிந்தனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து சீதபற்பநல்லூர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், சிறப்பு ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா வியாபாரி தாக்கப்பட்ட வழக்கு கொலைவழக்காக மாற்றம்- வெளியான வீடியோ காட்சி