திருநெல்வேலி:விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள தாட்டான்பட்டி என்ற கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இளைஞர்கள் சிலர் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட துறைகளிலும் சேவையாற்றி வருகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்புகள் மூலமாக பணம் சேர்த்து அந்த பணத்தில் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விடுமுறை நாட்களில் விமானத்தில் சொந்த ஊருக்கு வருவதை அறிந்து இப்பகுதியிலுள்ள பெண்கள் உள்ளிட்ட கிராமத்து மக்களுக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்று பல ஆண்டுகளாக மனதிற்குள் ஆசையை வளர்த்துள்ளனர்.
கிராமத்து மண் வாசனையோடு அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கையை நகர்த்தி வரும் இம்மக்களுக்கு விமான பயணம் என்பது பெரும் கனவாகவே இருந்தது. இந்த நிலையில் பல நாள் கனவு நிறைவேறும் விதமாக கோவாவில் உள்ள சவேரியார் ஆலயத்துக்கு புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும், அந்த பயணம் நிச்சயம் விமான பயணமாக தான் இருக்க வேண்டும் என்றும் ஊர் மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை திரட்டி வெற்றிகரமாக கோவாவிற்கு விமானத்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து விட்டனர். வரும் ஜனவரி 20ஆம் தேதி விண்ணில் பறக்க இருக்கின்றனர். முதற்கட்ட கட்டமாக தாட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 130 பேர் விமானத்தில் பயணிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம், லூர்து சாமி, ஜோசப், பிரின்ஸ் நிக்கோலஸ், ராயப்பன் ஆகியோர் செய்துள்ளனர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அருளானந்தம் கூறுகையில், “சிறு சிறு சேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். மேலும், எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என விரும்பினர் அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்று, ரயிலில் திரும்ப உள்ளோம். போக்குவரத்து, உணவு என நபருக்கு சுமார் 10 ஆயிரம் வரை செலவாகும்” என்றார்.