தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; தேசிய ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை..! - National Commission for scheduled Tribes

National Commission Investigation: திருநெல்வேலியில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் நேரில் வந்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

National Commission is investigated the Tirunelveli Scheduled Community youth assault case
நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய ஆணையம் நேரில் விசாரணை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 5:09 PM IST

திருநெல்வேலி: நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இளைஞர்களிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், இதுகுறித்த விரிவான அறிக்கை தேசிய ஆதிதிராவிடர் ஆணையகத் தலைவரிடம் அளிக்கப்படும் என்றும் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரையில், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பட்டியலின இளைஞர்களைக் கடந்த 30-ஆம் தேதி மது அருந்திய கும்பல் தாக்கி, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றைப் பறித்தனர். அதோடு அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் துன்புறுத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு 6 பேரை கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் நெல்லை பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் நெல்லைக்கு வந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

அதில், முதலாவதாக சம்பவம் நடந்த மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியைப் பார்வையிட்டார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களைச் சந்தித்து நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்து விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் சம்பவம் தொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் நேரில் சென்று விசாரணை செய்ய உத்தரவிட்டதன் பேரில், இன்று (நவ.07) நெல்லையில் ஆய்வு செய்துள்ளேன்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டோம். அவர்களின் குடும்பச் சூழல் குறித்தும் விசாரிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களையும் சந்தித்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

மேலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா? தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

இருந்த போதும், நாங்களும் சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளோம். இந்த விசாரணை குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவரிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணகுமார், கோட்டாட்சியர் ஷேக் அயூப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:தேனியில் உறவினர்கள் அடித்து கொலை மிரட்டல் விடுவதாக குழந்தைகளுடன் தாய் புகார்!

ABOUT THE AUTHOR

...view details