நெல்லை: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா(NASA), செயற்கை கோள்களின் தரவுகள் மற்றும் அதன் செயல் முறைகளை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் செயல்படும் வகையிலான செயலியை உருவாக்கும் விதமாக நாசா மொபைல் ஆப் சேலஞ்ச்(NASA Mobile App Challenge) என்ற போட்டியை நடத்தியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்சி மையம் உள்ளிட்ட பன்னாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த போட்டியை நடத்தினர். போட்டியில் திருநெல்வேலி அண்ணா பல்கலைகழக வளாகத்தை சேர்ந்த மாணவர் டொமினிக் வால்டர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியில் கல்லூரியை சேர்ந்த குரு பிரசாத் ஆகியோர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷெல்வின் ஜோநாதனுடன் இணைந்து தயாரித்த செயலி அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்தது.
உலக அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 162 நாடுகளிலிருந்து 31 ஆயிரத்து 561 மாணவர்கள் 5 ஆயிரத்து 327 குழுக்களாக கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து 323 குழுக்களும், தென்னிந்தியாவிலிருந்து 90 குழுக்களும் போட்டியில் கலந்து கொண்டனர், இதில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் அணி முதலிடத்தை பிடித்தது.
போட்டியின் அடுத்த கட்டமாக உலக அளவிலான மாணவர்களுடன், தமிழக அணி மோத உள்ளது. அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் தாங்கள் வடிவமைத்த செயலியின் செயல்முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் செய்து காட்டினர்.