திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தின் மூலையில் இருக்கும் நாங்குநேரி, இந்தியா முழுவதும் அறியப்பட மோசமான ஒரு காரணம் இருந்தது. கடந்த மாதத்தில் பள்ளியில் நடைபெற்ற சாதிரீதியான மோதலால் சக மாணவனை பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம்தான் அது. சாதி நுழைந்து கோரத்தாண்டவம் ஆட எந்த தடையும் நாங்குநேரியில் இருக்கவில்லை. ஆனால் அடிப்படை தேவையான பேருந்து வசதி நாங்குநேரிக்குள் இல்லை என்பது யாருக்கும் எட்டாததுதான் அவல நகைச்சுவை.
திருநெல்வேலி நகரிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் திருநெல்வேலி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது இந்த நாங்குநேரி. நாங்குநேரியை சுற்றி வள்ளியூர், திசையன்விளை, உவரி, பணகுடி போன்ற பிற நகரங்கள் உள்ளன ஆனால் இங்கிருந்து அண்டை நகரங்களுக்குச் சென்று வர போதிய பேருந்து வசதி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் பரிதவித்து வருகின்றனர். இப்பகுதி தொழில் ரீதியான வளர்ச்சியை எட்ட முடியாமல் போவதற்கும் இதுதான் காரணம்.
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் நாங்குநேரி ஊருக்குள் வராமல் நெடுஞ்சாலை ஓரம் ஊருக்கு வெளியே பயணிகளை இறக்கி விட்டபடி செல்வதாக ஒரு குற்றச்சாட்டுத் தொடர்ச்சியாக உள்ளது. திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் சார்பில் தற்போது திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு இரு மார்க்கமாக 40க்கும் மேற்பட்ட 1 to 1 பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த 1 to 1 பேருந்துகள் நாங்குநேரி ஊருக்குள் செல்வதில்லை. இது தவிர சாதாரண பேருந்துகளும் நாங்குநேரி ஊருக்குள் செல்லாமல் ஊருக்கு வெளியே பயணிகளை இறக்கி விடுகின்றனர்.
இதனால் பெண்கள், குழந்தைகள் போன்றோர் பாதுகாப்பின்றி சுமார் ஒரு கிமீ தூரம் நடந்து ஊருக்குள் செல்ல வேண்டியுள்ளது. இதைக் கண்டித்து நாங்குநேரி மக்கள் பல முறை போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். மேலும், நாங்குநேரி மக்கள் பலமுறை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் பேருந்தை வழிமறித்து வாக்குவாதம் செய்யும் சம்பவமும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
சில பேருந்துகளில் வலுக்கட்டாயமாகப் பயணிகளை ஏற்றினாலும் கூட நாங்குநேரி செல்வதற்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் குறிப்பாக நாங்குநேரிக்கு டிக்கெட் கேட்டால் நாகர்கோவில் டிக்கெட் கட்டணத்தை வசூலித்து விட்டு நெடுஞ்சாலை ஓரம் அவர்களை இறக்கிவிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது.