நெல்லை:திருநெல்வேலிமாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி சக பள்ளி மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவன் மற்றும் அவனது சகோதரி ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாதி வன்மத்தால் மாணவன் தாக்கப்பட்ட இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. நாங்குநேரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.அதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அமைச்சர்கள் பலர் நேரில் வந்து பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவனது தங்கையை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மாணவன் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது மேலும் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரிகள் இது சம்பந்தமாக பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த விசாரணையின் அடிப்படையில் முதற்கட்டமாக பள்ளி கல்வி இயக்குனருக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மாணவனுக்கு பள்ளியில் நடந்த சாதி கொடுமைகள் குறித்தும் சம்பவத்தன்று அவன் தாக்கப்பட்ட விவரங்கள் குறித்தும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவரது தங்கை இருவரையும் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றவும் பரிந்துரை செய்து உள்ளனர்.