திருநெல்வேலி:கடந்த ஒன்பதாம் தேதி இரவு நாங்குநேரி பட்டியல் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் வீடு புகுந்து சக மாணவர்களால் பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டார். அதனை அடுத்து அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவரும், அவரது தங்கையும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து 40 நாட்கள் ஓய்வில் இருக்க பரிந்துரை செய்துள்ளனர்.
ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடைய சாதிய மோதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் நாங்குநேரி சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையில் நாங்குநேரி விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். சின்னராசு சம்பந்தப்பட்ட வள்ளியூரில் பள்ளியில் நேரடி ஆய்வு செய்தார் அப்போது துறை ரீதியிலான விசாரணையை நடத்தினார். இந்த நிலையில் நாங்குநேரி சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட முதன்மை அலுவலர் சின்னராசு தற்போது பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.