தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் லாபங்களுக்காக சாதி வெறியைத் தூண்டும் திமுக - அண்ணாமலை விமர்சனம் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

அரசியல் லாபங்களுக்காக சாதி வெறியைத் தூண்டி, அதன் மூலம் ஆண்டாண்டு காலமாகப் பலனடைந்து வரும் கட்சி திமுக என்று நாங்குநேரியில் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 12, 2023, 3:45 PM IST

சென்னை: நாங்குநேரியில் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே சாதியப் பிரச்சினைகள் காரணமாக, 12-வது வகுப்பு படிக்கும் பட்டியல் சமூக மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரும், சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

பள்ளி மாணவர்களிடையே சாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருவதும், ஆயுதங்கள் கொண்டு தாக்குவதும், எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது. சிறந்த மாணவராக, வருங்காலத்தில், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் வரும் வாய்ப்புள்ள மாணவர் ஒருவர், சாதிய வன்முறையால் முடக்கப்படுவதை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருக்கும் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அற்ப அரசியல் லாபங்களுக்காக வேறு வேறு சமூகங்களிடையே சாதி வெறியைத் சாதி வெறியைத் தூண்டி, அதன் மூலம் ஆண்டாண்டு காலமாகப் பலனடைந்து வரும் கட்சி, திமுக என்பதை அனைவரும் அறிவர். இந்த சம்பவத்திலும், திமுக கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் காவல்துறையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. உதட்டளவில் சமூகநீதி பேசி, தேர்தல் வாக்குகளுக்காக சமூகத்தில் சாதிய வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருக்கும் திமுகவின் செயல்பாடுகளின் விளைவுதான், இது போன்ற கொடூர சம்பவங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திமுகவின் ஆரம்ப கால உறுப்பினராகவும், மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரையின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியிலிருந்த, மறைந்த சத்தியவாணி முத்து, திமுக தலைமை சாதியப் பாகுபாடு காட்டுகிறது என்ற குற்றச்சாட்டு இன்று வரையில் அப்படியே தொடர்கிறது என்பது அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. திமுக கட்சியிலும், பொதுமக்கள் மத்தியிலும், திமுக அமைச்சர்கள் பட்டியல் சமூக மக்களை அவமானப்படுத்தும் விதமாக நடத்துவது, செய்திகளில் வந்து கொண்டுதான் இருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே, பட்டியல் சமூக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவரை சாதியின் பெயரைச் சொல்லி அழைத்த அமைச்சர் பொன்முடி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூக ஊராட்சி மன்ற பெண் தலைவரை, தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்தும், அமர்வதற்கு நாற்காலி கூடக் கொடுக்காமல் அவமானப்படுத்திய உங்கள் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதியானது நாங்கள் போட்ட பிச்சை என்று சொன்ன ஆர்.எஸ்.பாரதி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த உங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்குக் கூட நாற்காலி கொடுக்காமல் நிற்க வைத்த உங்கள் அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, வேங்கைவயல் சம்பவம் நடந்து 200 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை நீங்கள், குற்றவாளியைக் கைது செய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மத்திய அரசு, பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் வழங்கும் நிதியைச் செலவிடாமல் திருப்பி அனுப்பி வருகிறீர்கள். இதுவரை பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள். இன்னும் ஒரு படி மேலாக, பட்டியல் சமூக மக்களுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியை, மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

பட்டியல் சமூக மக்களுக்கான அடிப்படை வசதிகளோ, பட்டியல் சமூக மாணவர்களுக்கு, சரியான பள்ளி வசதிகளோ, விடுதி வசதிகளோ அல்லது, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்டஈடு தொகையோ, அந்த நிதியிலிருந்து வழங்க உங்களுக்கு மனம் வரவில்லை. யாரை ஏமாற்ற இந்த சமூகநீதி நாடகமாடிக் கொண்டிருக்கிறீர்கள்? தேர்தல் நேரத்தில், வெறும் போட்டோ எடுத்து ஏமாற்ற மட்டும்தான் உங்களுக்கு பட்டியல் சமூக மக்கள் மீது அக்கறை வருமா?. மாணவர் சின்னதுரையின் கல்விப் பொறுப்பை, தான் ஏற்றுக் கொள்வதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

ஆனால், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டியது அல்லவா மாநில அரசின் கடமை? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை விளக்குவாரா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்?. திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடிகிறது என்றால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் ஏன் தடுக்க முடியவில்லை? அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கைகளைக் கட்டிப் போட்டு விட்டு, ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் தடம் புரள்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

பத்தாயிரம் சிதிலமடைந்த அரசுப் பள்ளிக் கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் கட்டுவோம் என்று சொல்லி ஆண்டு இரண்டு ஆகிறது. ஏழை மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் தானே செயல்படுத்தத் தோன்றும்?. திமுக ஆட்சியின் அவலங்கள் அனைத்திற்கும் யார் மீதோ பழிபோட்டு மடைமாற்றிக் கொண்டிருக்கும் அண்ணன் திருமாவளவன் அவர்களே, உடைந்த பழைய நாற்காலி, தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வேண்டுமானால் போதுமான சமூக நீதியாக இருக்கலாம். ஆனால், உங்களையும் தலைவர் என்று பின்தொடரும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் இதன் மூலம் நீங்கள் கொடுக்கும் செய்தி என்ன?.

இப்படி திமுகவின் சமூகநீதிக்கெதிரான செயல்கள் அனைத்தையும் மடைமாற்றுவதால் உங்களுக்குக் கிடைக்கும் பலன்தான் என்ன? ஏன் உங்கள் கட்சியினரையும், மக்களையும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் சம்பவங்களுக்கு எல்லாம் உச்சஸ்தாயில் குரல் கொடுக்கும் நீங்கள், தமிழகத்தில் பேச்சு கூட வராமல் முடங்கிப் போய் விட்டீர்களே உங்கள் தனிப்பட்ட நலனுக்காக, தமிழகத்தின் ஒரு பெரும் சமூகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்குப் பலி கொடுக்கப் போகிறீர்கள்?.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே, வெறுப்பில் பிறந்து, எழுபது ஆண்டுகளாக தமிழகத்தில் வெறுப்பை மட்டுமே விதைத்துக் கொண்டிருக்கும் உங்கள் கட்சி, தற்போது விதைத்துக் கொண்டிருப்பது, சமூகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடு என்னும் விஷ விதை. உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வளர்த்து வரும் இந்த விஷச் செடி, எம் தமிழக மக்களால் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், “திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளி மாணவர் சின்னத்துரை அவரது வீட்டில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டதும், அதை தடுக்க முயன்ற அவரது சகோதரி சந்திரா செல்வினும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி உயிருக்குப் போராடுவதும் வேதனையளிக்கின்றன.

பள்ளியில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ள செய்திகள் மனதிற்கு மிகுந்த கவலையளிக்கின்றன. அவர்கள் விரைவில் உடல்நலம் தேற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளியில் மாணவர் சின்னத்துரை தொடர்ந்து சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்துள்ளார். அது குறித்து பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்ததன் காரணமாகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மாணவர் சின்னத்துரை மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் தொடக்கத்திலேயே தடுக்கப்பட்டிருந்தால், அவருக்கும், அவரது சகோதரிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அவர்கள் தாக்கப்பட்ட அதிர்ச்சி தாளாமல் அவர்களின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்ததும் நடந்திருக்காது.

பள்ளிகள் தான் மாணவர்களை வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தும் நாற்றங்கால்கள். அங்கு சாதிவெறிக்கு இடமளிக்கப்படக்கூடாது. அவை சமூகநீதிக் கூடங்களாக திகழ வேண்டும். அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ, அவை அனைத்தையும் ஒட்டுமொத்த சமுதாயமும் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பாடங்களைக் கடந்து அன்பு, மனிதநேயம், சகோதரத்துவம் ஆகியவற்றை மாணவர்களுக்கு போதிக்க பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது ஆலோசனை வகுப்புகளை நடத்த வேண்டும். அவற்றை பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழ்நாட்டில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடிய குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீதும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தாக்குதலில் காயமடைந்த மாணவர் சின்னத்துரைக்கும், அவரது சகோதரிக்கும் தரமான மருத்துவம் அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இந்த சம்பவம் குறித்து, “நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படிக்கும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரையோடு ஒப்பிட்டு நன்றாக படிக்கும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியதால் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி காரணமாக வேறுபாடு ஏற்பட்டிருப்பதும், அதன் காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு மாணவர்கள் துணிவதும் நெஞ்சைப் பதறச்செய்கிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் பதற்றம் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதோடு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் உரிய கண்காணிப்புடன் மாணவர்களிடையே இத்தகைய மோதல்கள் நேரிடுவதற்கு காரணமான சூழல்களைக் கண்டறிந்து அவற்றைக் களையவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாங்குநேரி சாதி மோதல் விவகாரம்.. மாணவர்கள் சாதிய வேற்றுமை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வேதனை!..

ABOUT THE AUTHOR

...view details