நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஹெச். வசந்தகுமார், கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து, தான் வகித்துவந்த எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்து. இந்த நிலையில், தற்போது அந்த தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும் என்றும் நாங்குநேரி தொகுதியில் மொத்தம் உள்ள 299 வாக்குச்சாவடிகளில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை எனவும் கூறினார்.