நெல்லை: ’மகாகவி’ என்று அழைக்கப்படும் சுதந்திரப் போரட்ட வீரர் சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் இன்று (செப்.11) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள மதுரை, திரவியம் தாயுமான இந்து கல்லூரி மேல் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை பயின்றார்.
இந்தப் பள்ளியில் பாரதியாரின் வகுப்பறை ’நாற்றங்கால்’ என்ற பெயருடன் பரமாரிக்கப்பட்டு வருகிறது. நாற்றங்கால் வகுப்பறையில் பாரதியார் பயின்றபோது இருந்த இருக்கைகள் இன்னமும் பாதுகாக்கபட்டு வருகிறது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் பாரதி படித்த பள்ளி சார்பில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு கருத்தரங்கம், மாணவர்களுக்கான போட்டிகள், மரத்தான் ஓட்டம், தொடர் ஜோதி ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நினைவு தினமான இன்று பாரதியார் படித்த வகுப்பறையில் மாணவிகள் உறுதி மொழி எடுத்து மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளி சார்பில் நடந்த இந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்வில், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவரும் நெல்லை சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு உறுதி மொழி எடுத்துகொண்டு ’பாரதி கண்ட புதுமைப்பெண்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து பாரதியார் அமர்ந்து பயின்ற இருக்கையில் பாஜகவினருடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ”சட்டப்பேரவையில் கேட்டுகொண்டதற்கு இணங்க சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிக்கு அரசு விழா எடுக்குமாறு எழுப்பிய கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
வ.உ.சிதம்பரனாருக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தனி இருக்கை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க:'வான்வழியாகவும் இனி மருந்துகளை பெறலாம்... தெலங்கானாவில் புதிய முன்னெடுப்பு!