நெல்லை மாவட்டத்தின் பிரதான கால்வாய்களில் ஒன்றான கோடகன் கால்வாய் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாபநாசம் அணையிலிருந்து கோடகன் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறித்தி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கோடகன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இன்று (ஜூலை 24) மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார், '2001-21 ஆம் ஆண்டு வரை கண்ணடியான் கால்வாயில் தண்ணீர் திறக்கும் போதெல்லாம் கோடகன் கால்வாய்க்கும் தண்ணீர் திறக்கப்படும். ஆனால், தற்போது காரையாறு அணையில் 70 அடி தண்ணீர் இருக்கும் போது கண்ணடியன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாதது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே, நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என்றார். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தின் ஒருபகுதிக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டு மற்றொரு பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக கூறிய அவர், இதனை நம்பி வாழை மற்றும் பயிர்கள் கோடகன் கால்வாய் பாசன பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகவே, அந்த பயிர்கள் பாதிப்படையாமல் இருக்க தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என ஊர் மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார். தங்களின் இந்த மனு மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதையும் படிங்க: ரசிகர்களின் கோரிக்கையால் வெளியானது அரிக்கொம்பனின் வீடியோ!