தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியக் கட்சியான பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்துள்ளது. இதில் குறிப்பாக, திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏஎல்எஸ்.லட்சுமணனைவிட சுமார் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நெல்லையில் தாமரையை மலரவைத்த நயினார் நாகேந்திரன்
இவர் ஏற்கனவே அதிமுகவில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார் அதிமுகவில் இருந்தபோது, இதே திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்தச் சூழ்நிலையில் நெல்லை மாவட்ட அரசியல் வரலாற்றில், முதன்முறையாக நாகேந்திரன் தாமரையை மலர வைத்துள்ளார்.
நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்று வந்தனர். இந்தச் சூழ்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்ற உடனே நயினார் நாகேந்திரன் தனது தொகுதியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
அம்மா உணவகங்களில் தன் செலவில் இலவச உணவு
கடந்த வாரம் அவர் சென்னையில் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு, சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்தார். வந்த உடனே தனது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் வரும் 24ம் தேதி வரை எனது செலவில் இலவசமாக இரண்டு வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி நாள்தோறும் காலை மற்றும் மதிய உணவுக்கான தொகையை நயினார் நாகேந்திரன் நெல்லை மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறார்.