திருநெல்வேலி:சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது திருவுருவுச்சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூலை 11) தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அண்ணாமலை ரசிகர்கள் ஒரு வேகத்தில் அவரை 'வருங்கால முதலமைச்சர்' என்று அழைக்கிறார்கள்!.. அதில் தவறில்லை' என தெரிவித்துள்ளார். மதுக்கடைகளை மூடுவதால் அரசுக்கும் வருமானம் இழப்பு ஏற்பட்டாலும் இதை செய்ய வேண்டும் என்று கூறிய அவர், மதுக்கடைக்களின் நேரத்தையும் குறைக்க வேண்டும் என்றார். தேர்தலின்போது, திமுக பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று கூறிய நிலையில், அதனை ஆட்சியில் அமர்ந்ததும் செய்யாமல் தற்போது விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு பின்னால், 500 மதுக்கடைகளை மூடியதாக குற்றம் சாட்டினார். ஒட்டுமொத்த மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல, ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது வேலையை செய்வதாகவும், இதில் ஆளுநரை எந்த வேலையையும் செய்யக்கூடாது என எதிர்பார்ப்பது சரியல்ல என்று தெரிவித்தார். இது தொடர்பாக, கடிதம் எழுதுவதற்கென ஒருமுறை உள்ளதாகவும், ஆளுநரின் செயல்பாட்டில் எவ்விதமான குந்தகமான வார்த்தைகளும் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.