திருநெல்வேலி:தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழுத் தலைவரும் திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, பாஜகவில் மாநில இளைஞரணி துணைத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், பாஜக நிர்வாகி நயினார் பாலாஜி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவருடன் சேர்ந்து மோசடியாக பத்திரப்பதிவு (Nainar Balaji land Registration issue) செய்திருப்பதாக அறப்போர் இயக்கம் (Arappor Iyakkam) கடந்த ஆண்டு நயினார் பாலாஜி மீது குற்றம்சாட்டி சுமத்தி இருந்தது.
மேலும், இளையராஜா சட்டத்துக்கு புறம்பாக திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (Madurai Meenakshi Amman temple Lands) இடத்தையும் அதனுடன் சேர்ந்து விருகம்பாக்கம் இடத்தையும் நயினார் பாலாஜிக்கு கிரயம் செய்து கொடுத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நயினார் பாலாஜி பெயரில் பத்திர பதிவு செய்யப்பட்ட உத்தரவை இன்று (ஜூலை 20) பத்திர பதிவுத்துறை துணைத் தலைவர் அதிரடியாக ரத்து செய்துள்ளார். பாஜகவின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நயினார் பாலாஜி ரூ.100 கோடிக்கு மோசடி செய்திருப்பதாக வெளியான இந்த குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தன் மீதான குற்றச்சாட்டு குறித்து பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி திருநெல்வேலியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.