நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி தமிழகத்தில் முதல் அரசின் சித்த மருத்துவக்கல்லூரி ஆக தொடங்கப்பட்டு மருத்துவமனையுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கான விடுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்
சிதிலமடைந்ததன் காரணமாக மூடப்பட்டது.
இதேபோல் மாணவிகளுக்கான விடுதி ஒன்று கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த விடுதியில் மேற்கூரை அவ்வப்போது இடிந்து விடுவதாகவும் விடுதியில் உள்ள உணவு சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் கூறி, தொடர்ந்து மாணவிகள் தரப்பில் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கல்லூரி மாணவி விடுதிக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் விடுதியில் உள்ள மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.