தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகனை கொன்றுவிட்டதாக தாய் புகார்; காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு

திருநெல்வேலி: நில பிரச்னையில் கட்சி பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டு தனது மகனை கொலை செய்துவிட்டதாக தாய் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர் மீது நெல்லையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு
காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு

By

Published : Sep 18, 2020, 12:07 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா சொக்கன்குடியிருப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் எலிசபெத்(77). இவருக்கு செல்வன், ராஜன், ராஜா என்ற மூன்று மகன்கள் உள்ள நிலையில் செல்வன் நேற்று(செப் 17) பலத்த காயங்களுடன் திசையன்விளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மரணமடைந்தார்.

இந்நிலையில் நில பிரச்னை காரணமாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தூண்டுதலின் பேரில் திருமணவேல் என்பவர்தான், தனது மகனை அடித்துக் கொன்றுவிட்டதாக உயிரிழந்த செல்வனின் தாய் எலிசபெத் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் திசையன்விளை காவல் நிலையத்தில் நேற்று(செப் 17) புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், தனக்கு சொக்கன் குடியிருப்பு பகுதியில் விவசாய நிலம் இருக்கிறது. அருகில் எனது உறவினர் நிலத்தை திருமணவேல் என்பவர் கிரயம் பெற்று அனுபவித்து வந்தார். இந்நிலையில் திருமணவேல் எனது நிலத்தை அபகரிக்கும் நோக்குடன் செயல்பட்டு வந்ததால் எங்கள் இருவருக்கும் ஒரு ஆண்டாக நில பிரச்னை இருக்கிறது. இதன் காரணமாக எனது மூன்று மகன்கள் மீதும் தட்டார்மடம் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் திருமணவேலுக்கு ஆதரவாக செயல்பட்டு எனது மகன்கள் மீது பல்வேறு பொய் வழக்கு பதிந்து சித்ரவதை செய்து வந்தார்.

திருமணவேல் எனது தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்தது தொடர்பாக தட்டார்மடம் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தபோது அதை வாங்க மறுத்து எனது மகன் ராஜா மீது பொய் வழக்கு பதிவு செய்து அவனை அடித்து சித்ரவதை செய்தார். அதை தட்டி கேட்ட எனது மற்றொரு மகன் ராஜனையும் அடித்து சித்ரவதை செய்தார். ஜாமீனில் வந்த எனது மகன்கள் மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டதன் விளைவாக காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனால் கோபமடைந்த ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் எனது மகன்களை கொலை செய்ய முயன்றார்.

இந்த சூழ்நிலையில் எனது மகன் செல்வன் நேற்று(செப் 17) எங்கள் பகுதியில் உள்ள டேவிட் என்பவரின் கடைக்கு சென்றபோது திருமணவேல் அவனை காரில் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் எனது மகன் செல்வன் திசையன்விளை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாக தட்டார்மடம் காவலர்கள் தெரிவித்தனர். ஆனால் அங்கு சென்று பார்த்தபோது என் மகன் உயிரிழந்திருந்தான். மருத்துவரிடம் கேட்டபோது உங்கள் மகனை அடையாளம் தெரியாத நபர்கள் பலத்த காயங்களுடன் சேர்த்து விட்டதாக தெரிவித்தனர். எனவே என் மகன் சாவுக்கு காரணமான திருமணவேல், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தற்போது தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் மீது இம்மாவட்டம் திசையன்வளை காவல் நிலையத்தில் கொலை வழக்கு(302, 336, 364, 107) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணவேல், தட்டார்மடம் பகுதி அதிமுக பிரமுகர் என்று கூறப்படுகிறது. அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அதேபோல் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சொக்கன் குடியிருப்பு பகுதி தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வருகிறது அதே சமயம் உயிரிழந்த செல்வன் சிகிச்சை பெற்று வந்த திசையன்விளை அரசு மருத்துவமனை நெல்லை மாவட்டத்தில் வருவதால் இந்த சம்பவத்தில் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் மரணமடைந்த விவகாரத்தில் ஆய்வாளர் உள்பட பல்வேறு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது நில பிரச்னையில் கட்சி பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டு கொலை செய்ய தூண்டியதாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details