திருநெல்வேலி:காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிக்காக திருநெல்வேலிக்கு வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தனக்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தார்.
பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டதாகவும், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்பதால் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தேசிய கட்சி என்பது காங்கிரஸ், பாஜக மட்டுமே என குறிப்பிட்ட அவர் கூட்டணியில் உருவாகும் ஆட்சியே உண்மையான ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியும் என்றார். கமல்ஹாசன் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் அவரை வரவேற்பதாகவும், விஜய் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், சினிமா ரசிகர்கள் கூட்டத்தை மட்டுமே வைத்து அரசியல் கட்சியை நடத்தி விட முடியாது எனக் கூறிய அவர், வாக்கிற்கு பணம் வாங்கக் கூடாது என்ற நடிகர் விஜயின் கருத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
அதேபோல் பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்பது சாத்தியமில்லாதது என்றும், மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து மக்களின் உயிரிழப்பு மேலும் அதிகமாகும் எனவும் குறிப்பிட்டார். அதேபோல் பாஜக தன்னை எதிர்க்கும் அரசியல்வாதிகளை ஒடுக்கும் வகையில் அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், அமலாக்கத்துறை என்ற அமைப்பே இருக்கக் கூடாது என்றார்.