திருநெல்வேலிமாவட்டம், பாளையங்கோட்டை சேவியர் காலனியைச் சேர்ந்தவர், அந்தோணி செல்வி. இவரது கணவர் ஜேசுராஜ். இவர்களுக்கு, ஆறு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்னை இருப்பதால் அந்தோணி செல்வி தனது மகளை மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்குச் அழைத்து சென்றார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், பெருங்குடலில் செயல் இழந்த பகுதி இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான சிகிச்சை தங்களிடம் இல்லாததால் சென்னையில் உள்ள குழந்தைகள் நல தனியார் மருத்துவமனைக்கு செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை கடிதம் எழுதிக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து, அந்தோணி செல்வி தனது மகளை சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள மருத்துவர் சீனிவாசன், காலனிக் மேனமெட்ரி (Colonic manometry) என்ற பரிசோதனை செய்தால் தான் குழந்தைக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும், அந்த சோதனைக்கான பரிந்துரை கடிதத்தை மதுரையில் பெற்று வரும்படி கூறியுள்ளார். ஆனால், அந்தோணி செல்வி பலமுறை முயற்சித்தும் மதுரை தனியார் மருத்துவமனை மேற்கண்ட சிகிச்சைக்கான பரிந்துரை கடிதத்தை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் மனம் தளராமல் எப்படியாவது தனது ஆசை மகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் அந்தோணி செல்வி கடைசிவரை துணிச்சலோடு போராட முடிவு செய்தார். எனவே, மருத்துவ கவுன்சிலரிடம் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்திலும் அந்தோணி செல்வி வழக்குத் தொடுத்தார். ஆறு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்படியும் இடைப்பட்ட காலத்தில் சென்னை குழந்தை நல மருத்துவமனை குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.